மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு அக்குரானை, மினுமினுத்தவெளி, முறுத்தானை ஆகிய கிராம மக்களுக்காக கட்டப்பட்ட பொது குடிநீர் கிணறு கையளிக்கும் நிகழ்வு 23.03.2021 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச செயலக பிரிவுகளில் சமூக மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி , மாணவர்களுக்கான கல்வி ,சுகாதாரம் ,குடிநீர் , சமூக பாதுகாப்பு போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைத்து முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவின் அக்குரானை , மினுமினுத்தவெளி , முறுத்தானை ஆகிய கிராமத்தில் வாழ்கின்ற அடிநிலை மக்களின் குடிநீர் தேவை நலன் கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் 7 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட கிராமத்துக்கான பொது குடிநீர் கிணறு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வும் , கிராம பெண்பிள்ளைகளுக்கான சுகாதார பாதுகாப்பு பொதிகளும் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மாவட்ட பணிப்பாளரும் ,சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே .கருணாகரன் அவர்கள், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச உதவி செயலாளர் திரு எஸ் .யோகராஜா , கண்டுமணி லவகுசராஜா , மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , கிராமங்களில் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.