இனங்களுக்கிடையே உணவுக் கலாசார பன்மைத்துவத்தின் ஊடாக சமாதான மேம்பாடு எனும் தொனிப்பொருளிலமைந்த நிகழ்வு மட்டக்களப்பில் 18.03.2021 அன்று இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கையின் பாரம்பரிய சமூக கலாசார பண்பாட்டு ரீதியில் அந்தந்த சமூகங்களுக்கே உரித்தாக அமைந்த உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திரு கே. கருணாகரன் அவர்கள், இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரெட்ன, மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் திரு இராசையா மனோகரன், தேசிய சேவைகள் மன்ற மட்டக்களப்பு பணிப்பாளர் திரு ஹமீர், பட்டிப்பளை பிரதேச அலுவலர் திரு ஏ. தயாசீலன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா உள்ளிட்டோரும் தேசிய சமாதானப் பேரவையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சமயப் பெரியார்கள் அதன் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலங்கையின் உணவுக் கலாசாரத்தை பற்றிய இளைஞர்கள் ஆய்வு எனும் விடயமும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. பல்லின சமுதாயங்கள் வாழும் நாட்டில் பன்மைத்துவத்தின் ஊடான சமாதான மேம்பாடு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக்கருத்தரங்கும் இடம்பெற்றது.