மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைப்பது தொடர்பான விசேட கூட்டம் 18.03.2021 அன்று மாவட்ட செயலகத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வேளாண்மை இராஜாங்க அமைச்சின் கீழ் களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பொருளாதார மத்திய நிலையம் 2017 இல் கட்டப்பட்டு இதுவரையும் திறக்கப்படாமை தொடர்பில் இராஜாங்க அமைச்சின் மேலதிக நிருவாக செயலாளர் ஜே. எம். ஏ டக்ளஸ் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் களுதாவளை பொருளாதார மத்தியத்தின் அவசியம் பற்றியும், அதனை விரைவாக திறப்பது தொடர்பாகவும், இதன் மூலம் கிடைக்க இருக்கும் நன்மைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இதேபோன்று கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவில் மேலும் ஓர் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம், கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு திருகோண மலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் திரு என். விமல்ராஜ், காணி சீர்திருத்த ஆணைக்குழு கிளை நிருவாகப் பொறுப்பாளர் திரு எஸ். சுரேந்தர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் திரு கே. ஜெகநாத், மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு எம்.எஸ்.ஏ. கலீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் திரு வியாழேந்திரன், அரசாங்க அதிபர் திரு கருணாகரன், இரஜாங்க அமைச்சின் மேலதிக நிருவாக செயலாளர் திரு டக்லஸ் உள்ளிட்ட குழுவினர் இப்பொருளாதார மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.