அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 05.03.2021 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதிகளாக, பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திரு எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சி.சந்திரகாந்தன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகவும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் திருமதி.மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
எருவில் தெற்கு கிராம பொதுமக்களது பிரசன்னத்துடன் கைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வானது மிகவும் கோலாகலமாக பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அதிதிகளின் உரையினைத்தொடர்ந்து, சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை அதிதிகள் செவிமடுத்ததுடன் அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் நிவர்த்திப்பது மற்றும் குறைகளை நிவர்த்திப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.இதன்போது பிரதேசத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றினை அதிதிகள் பார்வையிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.