நாடளாவிய நிருவாக சேவைகள் மற்றும் இணைந்த சேவைத் தேர்வில் உச்ச மதிப்பெண்களை எய்தும் வகையிலும், அரச சேவையில் இணைந்துகொண்ட பணியாளர்கள் வினைத்திறன் போட்டி பரீட்சையினை இலகுவாக வெற்றி கொள்ளும் வகையிலும், இலங்கை அரச அலுவலக நிருவாக நடவடிக்கை தொடர்பாக 2020 ஆம் ஆண்டு வரை தாபனங்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் சுற்றறிக்கை மாற்றங்களை இற்றைப்படுத்தி இலங்கை நிருவாக வரலாற்றில் முதன் முறையாக “இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா 21.02.2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் நிருவாக சேவையின் விசேட தரத்தில் அறிவு திறன் ஆற்றல் அனுபவ முதிர்ச்சி பெற்ற மூத்த வளப் பேராளர் கலாநிதி. திரு. எஸ். அமலநாதன் அவர்களினால் உருவாக்கப்பட்ட இந் நூலினை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன, பாராளுமன்ற உறுப்பினர் கே. கருணாகரம் உட்பட சிறப்பு அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கே. கருணாகரன் மற்றும் பதில் நீதிபதியும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான திரு க. பேரின்பராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சட்டத்தரணி திரு மு. கணேசராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை பீட பேராசிரியர் வே. குணரெத்தினத்தினால் நூலாய்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வுநிலை கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் வே. பி. சிவநாதன், திருகோணமலை பல்கலைக்கழக வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம், தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடாதிபதி கலாநிதி. சே. குணபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.