பெரும்போக நெல் அறுவடையினை அரசினால் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாடுபூராகவும் விவசாய இராஜாங்க அமைச்சு மற்றும் நிதி அமைச்சினூடாக இடம்பெற்றுவரும் அதேவேளை இம்மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் கொள்வனவினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெற் சந்தைப்படுத்தும் சபையினால் பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்களை கொள்வனவு செய்யும் அதேவேளை நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கமைய சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக நெற் கொள்வனவினை துரிதப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக இம்மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் 11.02.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறிப்பிட்ட 5 அல்லது 6 அரிசி ஆலை உரிமையாளர்களை மையமாக வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இந் நெல்கொள்வனவினை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற் காணிகளில் 70 தொடக்கம் 75 வீதமான பரப்புக்களில் அறுவடை நடைபெற்று பெறப்பட்ட நெல் விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் எஞ்சிய பரப்புக்களில் இருந்து அதிகளவான நெல்லினை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன, மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். கலீல், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு. தங்கவேல், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ. தவராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பெரும்போக உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.