இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திரதின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலக உததியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களின் ஆசியுரையும், அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரையும் இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் தனது உரையில் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக இம்மாவட்டத்தில் 2035 பட்டதாரி பயிலுனர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குழும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 246 பேர் பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 627 நேர்முகப் பரீட்சையினை நிறைவு செய்து பயிற்சிக்காக காத்திருக்கின்றனர். இதற்கு மேலதிகமாக 459 பேர் நேர்முகப்பரீட்சைக்காக தெரிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் விரைவில் அவர்களது பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளன என தெரிவித்தார்.
மேலும் இவ்வாண்டில் நீர்ப்பாசன செழுமை திட்டத்தினூடாக இம்மாவட்டத்தில் 70 குளங்களும் 18 அணைக்கட்டுகளும் புனரமைக்கப்படவுள்ளதுடன் இத்திட்டமானது எதிர்வரும் 8 ஆந் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள மாவட்டுவான் நீர்ப்பாசனத் திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதனூடாக தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனூடாக விவசாயத்தில் பாரிய முன்னேற்றம் காண வாய்ப்புக்கிட்டியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் நாட்டின் தானியக்களஞ்சியம் என அழைக்கப்படும் இம்மாவட்டத்தினூடாக தேசிய அளவில் விவசாயத்திற்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய இடத்தைப் பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதுதவிர கோவிட்-19 இன் தாக்கம் இம்மாவட்டத்தில் இன்னும் நிலவுகின்றபோதிலும் அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதாரத் துறையினர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சகல தரங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொலிசார் மற்றும் முப்படையினருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக வளாகத்தின் சுற்றுப்புறச்சூழல், நகரப்பகுதியின் பஸ்தரிப்பு நிலையத்தின் வாவிக்கரை பகுதி போன்றன இடங்கள் சிரமதானம் செய்யப்பட்டு பயன் தரும் பழமரக்கன்றுகளும் நடப்பட்டன. அதிமேதகு மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச அவர்களின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும்; மூலிகை மரக்கன்றுகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.