அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைய அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 18 நாட்கள் நடைபெறும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இப் பயிற்சி வகுப்புக்களின் 2 ஆவது பயிற்சி வகுப்பானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கே. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட செயலாளர் திரு. ஏ. நவேஸ்வரன் தலைமையில் 03.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத், பிரதம முகாமைத்துவ உதவியாளர் (உதவி மாவட்ட செயலாளர் பிரிவு) எஸ். ஏ. மொஹமட் றிலா, தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வீ. சந்திரகுமார், வளவாளர்களான திருமதி. தனலட்சுமி தர்மராஜா, திரு. என். துஜோகாந் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.