அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4 வது விசேட கூட்டம் 06.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும். அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது. எனவே பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்கள் தனிமையில் இருந்துகொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட கண்காணிப்புக் குழுக்களுக்கான விழிப்பூட்டல் பயிற்சிகள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டு அக்குழு மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்டத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டு உள்வரும் வாகனங்கள் மற்றும் நபர்களின் விபரங்களை சேகரிக்கும் சோதனைச் சாவடிகளில் பொலிசாருக்கு மேலதிகமாக சுகாதாரப் பிரிவிலிருந்து ஒருவரும் மாவட்ட நிருவாகத்துறை சார்பாக ஒருவரும் இணைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதுதவிர தேசிய அளவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மாவட்டத்தில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இம்மாவட்டத்தில் தனிமைப்டுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று தெற்கு ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்தி 296 குடும்பங்களுக்கு தாலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, இராணுவ மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.