மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்கார தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்குமான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் மேம்படுத்தல் பணிகளில் செயற்பட்டுவரும் சேகிள் தன்னார்வுத் தொண்டு நிறுவன இளம் பெண்கள் பிரிவினால் சுமார் 2 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபா பெறுமதியான 150 உலர் உணவுப் பொதிளைக் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் 03.11.2020 அன்று இடம்பெற்றது.
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா அச்சம் காரணமாக திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த சிகை அலங்கார நிலைய தொழிலாளர்களுக்குமாக இவ்வுலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கவென சேகிள் தன்னார்வு தொண்டு அமைப்பின் இளம் பெண்கள் பிரிவுப் பொறுப்பாளர்களான அஜானி காசிநாதர் மற்றும் வசந்தகலா பிரதீபனால் இவ்வுலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத் மற்றும் சேகிள் அமைப்பின் பிரதிநிதிகளான அஜானி காசிநாதர் மற்றும் வசந்தகலா பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.