மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று இனங்காணப்படாத பிரதேசங்களில் மாத்திரம் சிகை அலங்கார நிலையங்களை திறப்பதற்கு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 01.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதையிட்டு அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராயும் நோக்குடன் அவசரமாகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில்
- வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களினதும் வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்களினதும் தகவல்களையும், வாகன விபரங்களையும் பொலிசாரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்குதல்.
- கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கினை மேலும் ஒருவாரம் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
- மாவட்டத்தில் செயற்படுகின்ற அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளது விபரங்களைப் பெற்றுக் கொள்ளல்.
- அரச சுற்றுநிருபத்திற்கமைவாக அரச அலுவலகங்களில் கடமைபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையினைக் மட்டுப்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விசேட கூட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ். மயூரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், இராணுவ மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.