மட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர் காலத்தில் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளதாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் திரு.டி.ஏ.பிரகாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தின் மக்களுடன் இணைந்துள்ள பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது. விவசாயத்தினை செய்கின்றவர்கள் நமது மாவட்டத்தின் மக்கள், குடிநீர் பிரச்சினையினை எதிர் நோக்கவுள்ளவர்களும் நமது மக்களாகத்தான் இருக்கும் ஆகையினாலே அதிகாரிகள் கடந்த கால படிப்பினைகளை கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும் என அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக விவசாயிகள் தங்களின் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் பருவகால மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் விவசாயிகளின் பயிர்கள் காய்ந்து போகின்ற நிலைமை உருவானதைத்தொடர்ந்து.
விவசாய மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகானும் முகமாக நீர்பாசன திணைக்களம் உடனடியாக விவசாய மக்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து ஒருவாரமாக உன்னிச்சை குளத்தில் இருந்து நீர்வழங்கப்பட்டது. இதனை தொடர்ச்சியாக வழங்கும் போது மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தக்கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பருவகால மழை போதியளவு கிடைக்காவிடின் அனைத்து தரப்பினரும் பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டிவரும் என நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.என்.நாகரெட்னம் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அபாயகரமான காலகட்டத்தில் மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களை பாராமரிக்கின்ற வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக நீரை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையினால் மக்கள் நீரை மிகவும் கவனமாக பாவிக்குமாறு பணிக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் திரு.ரி.சரவணபவன் யோசனை முன்வைத்தார்.
இவ்வருடம் காலநிலை மாற்றம் காரணமாக பருவகால மழை தாமதமாக கிடைக்கும் என எதிர்வு கூறப்படுவதனால் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளதாகவும் இன்னும் மூன்று மாதங்களுக்கான போதுமான நீர் தற்போது உன்னிச்சை குளத்தில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் தலைமையில் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினர் மற்றும் நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் திரு.ந.நாகரெட்னம், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புன்ணியமூர்த்தி, வர்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.