மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கான உரமானியத்தினை 07.10.2020 அன்று மட்டு அரசாங்க அதிபர் வெல்லாவெளி பிரதேசத்தில் முதல் தொகுதி மானிய உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.இலங்கையில் பெரும்போக விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கென வழங்கப்படுகின்ற மானிய உரம் மட்டக்களப்பில் தான் முதல் முதலில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் ஜனாதிபதியின் சுபீட்சமான நாட்டை நோக்கிய திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு எவ்விதமான தங்கு தடை இன்றிய செயற்பாட்டுக்கு கடந்தகால கொரோனா காலத்தில் கூட விவசாய உற்பத்தியை முன்னெடுக்க அரசினால் சிறந்த திட்டம் வகுத்து வாய்ப்புக்களை வழங்கியமையால் சிறுபோகத்தில் நல்ல விளைச்சலை அடைந்தனர். அதேபோன்று மீண்டும் கொரோனா அலை உருவான நிலையிலும் தங்களின் விவசாய நடவடிக்கையினை முன்னெடுத்து நாட்டின் உணவு தட்டுப்பாட்டினை நீக்குவதற்கு தங்களின் பங்களிப்பு அவசியம் என அரசாங்க அதிபர் விவசாயிகளை கேட்டுக்கொண்டர்.
வெல்லாவெளி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.கி.ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு.இ.ராகுலநாயகி மற்றும் உரச் செயலகத்தின் மட்டு மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.கே.எல்.எம்.சிராஜீடின், வெல்லாவெளி கமநல சேவைகள் நிலைய தலைமை பெரும்போக உத்தியோகத்தர் திரு.எம்.ஐ.எம்.பாயீஸ் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாய பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.