சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சிறுகடன் வசதியினை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்திட முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் விற்பனை கண்காட்சி மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களினால் 25.09.2020 அன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் உற்பத்தியாளர்கள் தாம் பெற்ற கடனின் தவணைக் கட்டணத்தினையும், வட்டியினையும் உரிய தவணையில் செலுத்த வேண்டும் என்ற மனநிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர். இதனால் அரவர்களின் வாழ்வில் சுமையினையே இது ஏற்படுத்தும். மேலும் இவர்களின் தொழில் முயற்சியினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லத் தேவையான உபகரணங்கள் மற்றும் தேவையான வசதியினையும், சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அவர்களினதும் மாவட்டத்தினதும் பொருளாதாரத்தினை மேம்படுத்தமுடியுமெனத் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமுக எழுச்சி நிறுவனம் (எஸ்கோ) ஆசியா மன்றத்தின் அனுசரணையுடன் பொருளாதார அபிவிருத்தி ஊடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தல் எனும் தொனிப் பொருளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சியினை கோறளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயற்படுத்தி வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான விற்பனைக் கண்காட்சி இடம்பெற்றது. இதன்போது உணவு உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆடை உற்பத்தி வகைகள், மட்பாண்டப் பொருட்கள், மரக்கறி உற்பத்திகள், மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்கள், பூந்தோட்ட அலங்கார பூக்கன்றுகள் அடங்கிய 60 விற்பனைக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இக்கண்காட்சியில் இம்மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய மூவினத்தைச் சேர்ந்த 86 தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை காட்ச்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.
இந்நிகழ்வில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி திரு ஜொகான் ரிபேட், எஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் திரு எஸ். ஸ்பிரிதியோன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வீ. வாசுதேவன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திரு கே. தனபாலசுந்தரம், ஆசியா அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திரு எம். ஜவாகிர், கள உத்தியோகத்தர் ஜே. நிவாத் உட்பட அரச அதிகாரிகள், தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.