மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள் தமது திணைக்களம் தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைள் மற்றும் மாவட்டரீதியான ஒருங்கிணைப்பு விடயங்களை பகிர்ந்து கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 11.09.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் சகல பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதாரம், போதனா வைத்தியசாலை, விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், போக்குவரத்து, அனர்த்த முகாமைத்துவம், பொலிஸ், உள்ளுராட்சி போன்ற அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சகல திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுடன் மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு காணப்படுகின்ற குறைபாடுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி நிவர்த்தி செய்வதற்கான தீர்மானங்கள் பல எட்டப்பட்டன.குறிப்பாக மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வளப் பங்கீட்டினை மாகாணத்தின் அனுமதியுடன் 5 கல்வி வலயங்களினதும் ஒத்துளைப்புடன் மாவட்ட ரீதியாக நிவர்த்தி செய்வதற்கான தீர்மானங்கள் எட்டப்படன. மேலும் பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளக் குறைபாடுகளும் நிவர்த்தி செய்வதற்கு ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டன.
இது தவிர மாவட்டத்தின் சுகாதார மற்றும் வைத்தியசாலைகள், போக்குவரத்து, நீர்ப்பாசனம், விவசாயம், பாதுகாப்பு போன்ற அனைத்துத் துறைகளிலுமுள்ள முன்னேற்றங்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் பல எட்டப்பட்டது.