மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026/2027ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாயச் செய்கைக்குத் தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தடையின்றி வழங்குவது தொடர்பான மாவட்ட உரக்குழுக் கூட்டம் இன்று (16) புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரும்போக செய்கைக்குத் தேவையான யூரியா, ரி.எஸ்.பி. (TSP), எம்.ஓ.பி. (MOP) உள்ளிட்ட உரங்களின் கையிருப்பு மற்றும் தொடர்ச்சியான விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டது.
மாவட்டத்திலுள்ள தனியார் உரக் கம்பனிகளின் கையிருப்பில் உள்ள உரங்களின் அளவு, தரம் மற்றும் விற்பனை விலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கமநல சேவை நிலையங்களினூடாக தனியார் நிறுவனங்களின் உரங்களையும் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவனேசன், தேசிய உரச் செயலகத்தின் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் கே. எல். எம். சிறாஜுன், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், உரக் கம்பனிகளின் பிரதிநிதிகள், முகவர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






