கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி கிறில் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களுடன் (15.09.2026) புதிய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதன் போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்களை வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுடன் இணைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சிகள் மற்றும் கற்கைநெறிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
WUSC நிறுவனம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது சேவைகளை விரிவுபடுத்தி இளைஞர், யுவதிகளின் தொழில்திறனை மேம்படுத்துவதுடன் அவர்களை வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுடன் இணைக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளது.
மேலும் தொழில்துறையில் ஏற்கனவே பெற்றுள்ள அனுபவம் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு RPL (Recognition of Prior Learning) முறையின் ஊடாக சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டத்திற்குத் தேவையான நிதியுதவியை கனேடிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கவுள்ளதுடன் இதன் மூலம் தொழில் வாய்ப்பின்றிக் காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு தகுதிக்கேற்ற சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,
கனடா உலகளாவிய விவகாரங்கள் திணைக்கள திட்டக் குழுத் தலைவர் அப்துல்லா மொஜத்தெடி, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய சிரேஷ்ட அபிவிருத்தி அதிகாரி ட்ரெவர் லுடோவைக், உதவி மாவட்ட செயலாளர், WUSC நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.முருகவேள், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) நிபுணர், எஸ். ராமையா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






